விஜய் தற்போது கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருவது பலரும் அறிந்த ஒன்றே. அவரின் மகனான ஜேசன் சஞ்சயும் ஹீரோவாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் நடித்த “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் அடிச்சா தாங்கமாட்ட” என்ற பாடலில் ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தார்.
அப்போது அவர் சிறு வயது பையனாக இருந்தார். ஆதலால் ஜேசன் சஞ்சய் வளர்ந்தவுடன் நிச்சயம் ஹீரோவாக அறிமுகமாவார் என்றே கூறப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய்யின் திட்டமே வேறு மாதிரியாக இருந்தது. அதாவது அவர் வெளிநாட்டில் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கச் சென்றார். மேலும் சமீபத்தில் ஒரு உலகத் தரம் வாய்ந்த குறும்படம் ஒன்றையும் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பு வெளிவந்தது. அதாவது லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், “ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் கேமியோ ரோலிலாவது நடிப்பாரா?” என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தனஞ்சயன், “விஜய் நிச்சயம் கேமியோ ரோலில் நடிக்க மாட்டார். அவர் ஏற்கனவே ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறினார்கள். ஆனால் அது இப்போது இல்லை என்றாகிப்போனது. விஜய் மாதிரியான ஒரு பெரிய நடிகர் சில நிமிட காட்சிகளில் நடிப்பது என்பது எப்படி சாத்தியமாகும்.
விஜய் எப்போதும் தன்னால்தான் தனது மகன் வளரவேண்டும் என நினைக்க மாட்டார். தனது மகன் இவ்வாறு படம் இயக்குகிறார் என்று விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் கூட பகிரவில்லை. இதில் இருந்தே தனது மகன் விஷயத்தில் அவர் தலையிடமாட்டார் என தெரியவருகிறது” என்று கூறியிருந்தார்.





