தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறுகின்றன என்பதை நாடி பிடித்து பார்க்கும் ஜோதிடர்கள் போல, கணித்து சொல்லி விட முடியாது. சில படங்கள் மாபெரும் வெற்றி பெறும். சில படங்கள் மாபெரும் தோல்வியை பெறும். சில பெரிய படங்கள், தியேட்டருக்கு வந்த சில நாட்களில் காணாமல் போகும். சில சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைக்கும்.
கடந்த 2024ம் ஆண்டு துவங்கியது முதல் கடந்த ஒன்றரை மாதங்களில் மொத்தம் 11 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகி விட்டன. ஆனால் இதில் ஒருபடம் கூட மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை என்பதுதான், கோலிவுட் வட்டாரத்தில் இப்போது லேட்டஸ்ட் டாக் ஆக இருந்து வருகிறது. இதற்கும் இதில் சில படங்கள் பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் என மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் கேப்டன் மில்லர் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அதிகமாக இருந்தது.
ஆனால் அயலான் படம் பிளாப் ஆனது. அதே போல் மெரி கிறிஸ்துமஸ் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் விட்டது. அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருந்தாலும் அயலான், கேப்டன் மில்லர் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியானதால், 80 தியேட்டர்களில் மட்டுமே ரிலீசான மிஷன் சேப்டர் 1 படத்தின் வசூல் இழப்புக்கு அதுவே காரணமாகி விட்டது.
அடுத்து ரஜினிகாந்த் நடித்த லால் சலாம், மொய்தீன் பாய் மொக்க சலாம் பாய் ஆக பிளாப் ஆகி விட்டது. இப்போது வெளிவந்த ஜெயம் ரவி நடித்த சைரன் படமும், ரசிகர்களின் கூட்டமும் சத்தமில்லாமல் தியேட்டரில் காற்று வாங்குகிறது. காமெடி ஹீரோ சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படமும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், சங்கு ஊதி விட்டது.
மறக்குமா நெஞ்சம், சிக்லெட்ஸ், சிங்கப்பூர் சலூன், டெவில் போன்ற படங்களும் ரிலீஸ் ஆனதும் தெரியவில்லை. தியேட்டரை விட்டு வெளியே போனதும் தெரியவில்லை. இப்படி ஒன்றரை மாதங்களில் வெளியான 11 படங்களுமே, சுமாரான படங்களாக, வெகு சுமாரான படங்களாக, மொக்கை படங்களாக இருந்து ரசிகர்களை ஏமாற்றி விட்டன. இந்த ஆண்டில் இனி வரப்போகும் படங்களாவது தேறுமா, என்பதுதான் கோலிவுட் சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.





