தமிழ் சினிமாவை பொறுத்தவரை படத்தில் நடிக்கும் நடிகர்களை, ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் ரசிகர்கள் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. அது எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் தொடங்கி, ரஜினி கமல் என தொடர்ந்து இப்போது விஜய் அஜீத் சூர்யா விக்ரம் என ரசிகர்கள் நடிகர்களை கொண்டாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள், பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பலரும் அட்வைஸ் செய்தாலும், அதை ரசிகர்கள் கேட்டுக் கொள்வதாக இல்லை. சினிமா நடிகர்களை ஏதோ தேவலோக மனிதர்களைப் போல உயர்ந்த நிலையில் வைத்து பார்ப்பதும், அவர்களுக்காக ரசிகர் மன்றங்கள் துவங்கி பெரிய அளவில் அவர்களை கொண்டாடுவதும் எப்போதும் நடந்து வருகிறது.
சினிமா நடிகர்களுக்காகவே தங்களது சொந்த வாழ்க்கையை தொலைத்த ரசிகர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் தங்களை கொண்டாடும் ரசிகர்களை நடிகர்கள் மதித்தார்களா என்றால், அதுதான் இல்லை. குறிப்பாக நடிகர் அஜீத் போன்றவர்கள் ரசிகர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். ரசிகர் கூட்டம் இருக்கும் இடத்துக்கு நான் வரமாட்டேன் என்று சொல்வது தான் அஜித்தின் ஸ்டைல்.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தினமும் கூடும் நூற்றுக்கணக்கான ரசிகர்களை, அவர் நேரில் சந்திப்பதே இல்லை. ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் யாரேனும் பெரிய மனிதர்கள், சினிமா சார்ந்த முக்கியஸ்தர்களின் சிபாரிசு இருந்தால் மட்டும் தான் சாதாரண ரசிகர்கள் சந்திக்க முடியும். மத்தபடி அவரை கடவுளாக வழிபடும் ரசிகர்களுக்கு, அவர் அருகில் போகும் நெருங்க கூட வாய்ப்பு கிடைக்காது.
நடிகர் கமலஹாசனும் அதே போல்தான், மேடையில் ரசிகர்கள்தான் என் தெய்வம் என்று கூறும் பல நடிகர்கள், ரசிகர்களை தங்கள் அருகில் கூட நெருங்க விட மாட்டார்கள். அதற்காகத்தான் பல லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து பவுன்சர்களை தங்கள் அருகிலேயே வைத்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு படத்தை படமாக மட்டும் என்ஜாய் பண்ணி பாருங்கள். அந்த படம் வசூலில் என்ன செஞ்சதுன்னு வணிகரீதியான விஷயம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். படம் குறித்து விமர்சனம் செய்து கொண்டு இருக்காமல், அதை என்ஜாய் செய்து பார்ப்பதுடன் விட்டுவிடுங்கள். அதுதான் உண்மையான பொழுதுபோக்கு என்று பேசியிருக்கிறார். அதாவது படம் பார்ப்பதோடு உங்கள் வேலை முடிந்தது. அதைப்பற்றி விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதுதான் சூர்யா சொல்லும் அட்வைஸின் முக்கிய கருத்து. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





