தமிழ் சினிமாவில் உருவான சில படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் போதுமான வசூல் ஈட்டவில்லை என்றாலும் காலத்தால் அழியாத சிறந்த படைப்புகளாக எப்போதும் நிலைத்து நிற்கும். அப்படி ஒரு படம் தான் குற்றமே தண்டனை. வணிக ரீதியாக படம் போதிய வரவேற்பை பெறாத போதும் விமர்சன ரீதியாக தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாக நிற்கிறது.
காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குற்றமே தண்டனை. ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் குறித்து நடிகர் விதார்த் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, எனக்கு குற்றமே தண்டனை திரைப்படம் தொடர்பாக பொருளாதார ரீதியாக பிரச்சினை இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு பெஞ்ச் மார்க் ஆக அந்த படம்தான் உள்ளது. இன்று நான் உலக நாடுகள் எங்கு சென்றாலும் அனைவரும் குற்றமே தண்டனை படம் குறித்து பேசுவார்கள்.
சில பேர் படம் குறித்து பேசும்போது டனல் விஷன் என்றும் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு குற்றமே தண்டனை மக்களிடையே ரீச் ஆன ஒரு படம். என் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இந்தப் படத்தை தான் சொல்வேன். எனக்கு இந்தப் படத்தின் மூலம் 1 ரூபாய் கூட லாபம் கிடைக்கவில்லை. படத்துக்காக நான் செலவிட்ட அனைத்து பணமும் போய்விட்டது.
கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட். ஆனால் எந்த லாபமும் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் அது குறித்து கவலைப்பட்டதில்லை. அந்தப் படத்தை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் படத்தை வாங்கியவர்கள் லாபம் பார்த்தார்கள். எனக்குதான் எதுவும் கிடைக்கவில்லை. அது குறித்து அவ்வளவு ஆழமாக பேச தேவையில்லை.
நான் அதுகுறித்து ஒருநாளும் வருத்தப்பட்டது கிடையாது. காரணம் என்னுடைய வாழ்நாளில் சிறந்த படம் என்றால் அது குற்றமே தண்டனை படம் தான் என்று நடிகர் விதார்த் கூறியிருக்கிறார். கொலை குற்றவாளியான அவர் அந்த தண்டனையில் இருந்து சட்டத்தை ஏமாற்றி தப்பித்து விடுவார். ஆனால் அவரது கண்பார்வையின் வட்டம் சிறிது சிறிதாக குறைந்து கடைசியில் கண் பார்வையை அவர் இழப்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.





