நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ராயன். இது தனுஷ் நடித்துள்ள 50வது படம். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராயன் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், எஸ்ஜே சூர்யா, சரவணன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில், படத்தின் சில காட்சிகளை நீக்கினால், யு சான்றிதழ் வழங்குவதாக தணிக்கைக் குழு தெரிவித்திருந்ததது. இதையடுத்து ராயன் படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், படம் மிக சிறப்பாக வந்துள்ளது. படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் இன்று இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள், ராயன் படத்தை பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். வழக்கமான பழிவாங்கும் கதையை பின்னணியாக கொண்டதுதான் என்றாலும், அண்ணன் செல்வராகவன் போல படத்தை இயக்காமல், தனது குரு வெற்றிமாறன் போல இந்த படத்தை தனுஷ் எடுத்துள்ளதாக பலரும் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தின் இடைவேளை காட்சியில் தனுஷ் அதகளம் செய்திருக்கிறார் எனவும், இதுவரை வந்த தனுஷ் படங்களில், இடைவேளை காட்சியில் வேற லெவலில் சம்பவம் செய்திருப்பதும் இந்த படத்தில்தான் என்றும் பாராட்டுகள் குவிகிறது. படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களது கேரக்டர்களில் சிறப்பான பங்களிப்பை தந்து ஸ்கோர் செய்திருக்கின்றனர்.
அதிலும் ராயன் படத்தின் மற்றொரு நாயகன் படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான்தான் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த படத்தின் இசை, பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் அதகளம் செய்திருக்கிறார் எனவும், மீண்டும் தன்னுடைய இசை மூலம் கம்பேக் தந்திருக்கிறார் ஏஆர் ரகுமான் என்றும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
மூன்று சகோதரர்கள் பெற்றோர் இல்லாமல் வளருகின்றனர். அதில் மூத்த அண்ணன் தனுஷ் ஆதரவில் இரண்டு தம்பிகளும் வளருகின்றனர். ஒரு கட்டத்தில் பெரிய சிக்கலில் மூன்று பேருமே சிக்கி விடுகின்றனர். அந்த பிரச்னையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் கதை, படம் முழுக்க கத்தி, அரிவாள் என ரத்த சரித்திரம் பேசினாலும் வலுவான திரைக்கதையால் தனுஷ் இந்த படத்தில் நின்று ஜெயித்து விளையாடி இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.





