தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்துள்ள தனுஷ், அதனை தொடர்ந்து தனது 50 ஆவது திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். மேலும் ஹிந்தியில் “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் திரையை கிழித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ், சாயா சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “திருடா திருடி”. இத்திரைப்படம் தனுஷின் கெரியரில் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. அந்தளவுக்கு மாஸ் ஹிட் ஆன திரைப்படம் இது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” பாடல் இப்போதும் மிக பிரபலமாக வலம் வரும் பாடலாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகை சாயா சிங் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“திருடா திருடி” திரைப்படம் வெளிவந்தபோது, சாயா சிங் கேரளாவில் இருந்தாராம். அப்போது ஒரு உதவி இயக்குனரிடம் தொடர்புகொண்டு “படத்திற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது?” என்று கேட்டாராம். அதற்கு அவர் “தியேட்டரின் திரையையே கிழித்துவிட்டார்கள்” என கூறியுள்ளார்.
படம் என்ன அவ்வளவு மோசமாகவா இருந்தது என்று தனக்கு தானே நினைத்துக்கொண்ட சாயா சிங் வருத்தத்தில் அழுதாராம். அப்போது அவரது தாயார், “ஏன் அழுகுற, அதுதான் மன்மத ராசா பாடல் ஹிட் ஆகிடுச்சே” என கூறினாராம். அதன் பிறகுதான் சாயா சிங்கிற்கு உண்மை தெரிய வந்திருக்கிறது.

அதாவது சென்னையில் “திருடா திருடி” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் மன்மத ராசா பாடலை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு திரையரங்கு நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் ரசிகர்கள் கோபத்தில் திரையை கிழித்துவிட்டார்களாம். இதுதான் நிஜத்தில் நடந்த சம்பவம்.





