40 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த முழுநீள நகைச்சுவை படம் இன்று போய் நாளை வா. இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படத்தில் ராதிகா, அமீர்ஜான், கல்லாப்பட்டி சிங்காரம், காந்திமதி, செந்தில், சூர்யகாந்த், பழனிசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் காமெடியில் இப்போதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு படமாக உள்ளது.
இந்த படத்தில், இந்தி புரபசர் அமீர்ஜானிடம் பாக்யராஜின் நண்பராக நடித்த கல்லூரி மாணவர், டியூசன் மூலம் இந்தி கற்றுக்கொள்வார். அப்போது ஏவ் கவ் மே ஏ கிஸான் ரகு தாத்தா என்ற வசனத்தை பேசும் காட்சி, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். அதனால்தான், கீர்த்தி சுரேஷ் நடித்த இந்தி எதிர்ப்புக்கான இந்த படத்துக்கு ரகுதாத்தா என பெயரிடப்பட்டுள்ளது.
ஹாமலோ பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சுமன்குமார் டைரக்ட் செய்திருக்கிறார். பலத்த வரவேற்பை பெற்ற தி பேமிலி மேன் வெப் சீரிஸ் கதை வசனம் எழுதியவர் சுமன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோருக்கு அடுத்தபடியாக கதாநாயகியை மையப்படுத்தி படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ரகுதாத்தா படம் நேற்று 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், முதல் நாளில் இந்த படத்துக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 படங்களுக்கு மத்தியில் இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேஜிஎப், காந்தாரா, சலார் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த ஹாமலோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஒய் யாமினி இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ரகுதாத்தா படத்தில் நடித்திருக்கிறார்.
முதல் நாளில் ரகுதாத்தா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ஆன விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்த படம் நல்ல விஷயத்தை பேசுவதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அழகில் கீர்த்தி சுரேஷ் மனதை அள்ளுவதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாசிட்டிவ் விமர்சனங்களாக ரசிகர்கள் கூறுவதால் ரகுதாத்தா படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.





