- Advertisement -
Homeபொழுதுபோக்குஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்!

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்!

- Advertisement -

புதிய ரிலீஸ் திரைப்படங்களை ஓடிடி தளங்களில் 4 வாரங்களுக்கு பதிலாக 8 வாரங்கள் கழித்து திரையிட வேண்டும் என்ற விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் – தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகத்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்புகள் நடக்காது என தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. பெப்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சிரமங்களை திரைப்பட தொழிலாளர்களின் அமைப்பான பெப்சி நன்கு உணர்ந்து வருகிறது. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே மாற்று கருத்து இருந்தது இல்லை.

சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்களுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தீர்ப்பதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்பட பணிகளையும் கூட வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது தான் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.

திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் நிறுத்தப்படும் போது அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, தினசரி வேலைவாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்போது தினசரி அந்த வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை சார்ந்து வாழும் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

திரைப்பட தொழில் என்பது தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒளிப்பதிவாளர்கள் உதவி இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மேக்கப் கலைஞர்கள் ஆடைத் தொழிலாளர்கள் லைட் மேன்கள் செட் தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த துறையுடன் இணைந்துள்ளது.

எனவே தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்பட பணிகளையும் நிறுத்தும் முடிவை தயவுசெய்து தயவு செய்து மறுபரிசீலனை செய்யுமாறு பெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்