சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படம் ரஜினிகாந்திற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த வெற்றியால் ரஜினிகாந்த், நெல்சன், சன் பிக்சர்ஸ் ஆகியோர் மட்டுமல்லாது ரஜினிகாந்தின் ரசிகர்களும் தங்களது சொந்த வெற்றியாக பார்க்கின்றனர். ஏனென்றால் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்”, “அண்ணாத்த” ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்தனர்.
இதனிடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை வேறு வந்ததால், நிச்சயமாக “ஜெயிலர்” திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இருந்தனர். எனினும் அவர்கள் நினைத்ததை விட “ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. “இந்த வெற்றியின் மூலம் ரஜினிகாந்த் தன்னை நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துவிட்டார்” என ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைகள், “ரஜினிக்கும் கமலுக்கும் இனி போட்டி இல்லை, ரஜினிக்கும் விஜய்க்கும்தான் இனி போட்டி” என்ற பேச்சுக்களை தொடங்கிவைத்துவிட்டன. மேலும் “ஜெயிலர்” திரைப்படத்தின் பாடல் ஒன்றில் இடம்பெற்ற வரிகளும், “ஜெயிலர்” ஆடியோ வெளியீட்டில் ரஜினிகாந்த் கூறிய காகா-கழுகு கதையும் விஜய் ரசிகர்களை உசுப்பேத்திவிட்டது.
அதே போல் விஜய் “தளபதி 68” திரைப்படத்திற்கு ரூ.200 கோடிகள் சம்பளம் வாங்க உள்ளார் என்று ஒரு தகவல் பரவியது. இதனைக் கொண்டு “ரஜினியை விட விஜய்தான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆதலால் அவர்தான் சூப்பர் ஸ்டார்” என்ற பேச்சுக்களும் அடிபட்டன.

இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து விஜய்க்கு போட்டியாக ரஜினிகாந்தும் தனது சம்பளத்தை ரூ.200 கோடிகளாக உயர்த்தி உள்ளாராம். ரஜினிகாந்தின் “தர்பார்”, “அண்ணாத்த” ஆகிய திரைப்படங்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து ரஜினி தனது சம்பளத்தை ரூ.80 கோடியாய் குறைத்துக்கொண்டார் என பலரும் கூறினர்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தலைவர் 171” திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் தனது சம்பளத்தை ரூ.200 கோடிகள் என நிர்ணயித்துள்ளாராம். மேலும் இது ரூ.220 கோடிகளாக அதிகமாகும் வாய்ப்பும் உண்டு என்றும் கூறுகின்றனர்.





