எம்ஜிஆர் சிறந்த நடிகர் பண்பான மனிதர் நல்ல அரசியல் தலைவர் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம். ஆனால் சினிமாவில் எம்ஜிஆர் மிகச்சிறந்த வல்லுனர். திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் வசனகர்த்தா ஒளிப்பதிவு தொழில் நுட்பம் படத்தொகுப்பு எடிட்டிங் மேக்கப் உடை அலங்காரம் என சினிமா துறையின் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் அவர் ஒரு நிபுணராக திகழ்ந்தவர்.
உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தை எம்ஜிஆர் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி வரும். அதில் புத்தர் கோவிலில் ஹீரோ எம்ஜிஆரும் வில்லன் எம்என் நம்பியாரும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் அந்த சண்டை காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகும்.
சென்னையில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் அரங்கம் அமைத்து இந்த காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சி 30 ஆயிரம் அடிக்கு மேல் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால் 4 நிமிடங்கள் மட்டுமே அந்த சண்டை காட்சியை படத்தில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இயக்குனர் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.
அதனால் படமாக்கப்பட்ட 30 ஆயிரம் அடியை 4 ஆயிரம் அடியாக குறைக்க வேண்டும். எம்ஜிஆர் நடித்த பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சங்கர். அவரை நேரில் அழைத்த எம்ஜிஆர் 30 ஆயிரம் அடி பிலிம்சுருளை அவரிடம் கொடுத்த இதை 4 நிமிடம் ஓடக்கூடிய அளவில் குறைத்துக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் சங்கரும் பல அனுபவமுள்ள உதவியாளர்களுடன் எடிட்டிங் அறையில் பிலிம் சுருளை கட் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவர்களால் 25 ஆயிரம் அடி கொண்ட சண்டைக்காட்சியாக மட்டுமே குறைக்க முடிந்தது. இதற்காக அவர்கள் பல நாட்கள் போராடினார்கள். அதற்கு மேல் அவர்களால் அந்த சண்டை காட்சியை கட் பண்ண முடியவில்லை. எம்ஜிஆரை சந்தித்த இயக்குனர் ஷங்கர், எங்களால் 5 ஆயிரம் அடிதான் இதில் குறைக்க முடிந்தது. நீங்கள் கூறியபடி 25 ஆயிரம் அடியை குறைக்க முடியவில்லை என்று தயங்கியபடி கூறினார்.
அதை கேட்ட எம்ஜிஆர், அன்று இரவு ஷூட்டிங் சென்று விட்டு எடிட்டிங் அறைக்கு வருவதாக சொன்ன எம்ஜிஆர், அதே போல் வந்துவிட்டார். பிறகு அவரே அந்த 25 ஆயிரம் அடி சண்டை காட்சியை எடிட் செய்து ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரம் அடியாக குறைத்து விட்டார். இயக்குனர் சங்கர் உள்ளிட்ட அனைவரும் பிரமித்து போய்விட்டனர். அதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற பரபரப்பான சண்டை காட்சியாகவும் இருந்தது.





