தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகர் விவேக். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் காமெடி செய்த அவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். வெறும் காமெடி மட்டும் தராமல், நல்ல கருத்துகளை சமுதாய விழிப்புணர்வு சிந்தனைகளை தனது காமெடியுடன் சேர்த்து ரசிகர்களுக்கு தந்தார்.
அதனால் அவரை ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்தனர். ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் சிவாஜி பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் விவேக் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தியன் 2 படத்தில் அவர் கடைசியாக நடித்தார். கமலுடன் அவர் நடித்த முதல் படம் என்ற நிலையில் அவர் தனது 59வது வயதில் மறைந்து விட்டார். இது தமிழ் சினிமாவுக்கே பேரிழப்புதான்.
நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் செல் முருகன். குறிப்பாக சாமி குருவி என்னை அறிந்தால் முரட்டுக்காளை வேலையில்லா பட்டதாரி திருமலை வெடி மாப்பிள்ளை பிருந்தாவன் என பல படங்களில் விவேக்குடன் காமெடி காட்சிகளில் நடித்தவர்தான் செல் முருகன். பெரும்பாலும் விவேக்கின் நண்பராக பல காட்சிகளில் செல் முருகன் உடன் வருவார்.
உண்மையில் நடிகர் செல்முருகன், நடிகர் விவேக்கின் மேலாளர் என்பது பலருக்கும் தெரியாது. தனது மேனேஜராக இருந்தாலும் அவரது நடிப்பு திறமையை அறிந்த நடிகர் விவேக், தான் நடிக்கும் படங்களில் அவருக்கும் பல காட்சிகளில் நடிக்க வாய்ப்பளித்து அவரையும் ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறச் செய்தவர்.
நடிகர் விவேக் வேல்முருகனை ஒரு மேனேஜராக மட்டும் பார்க்காமல் தனது சொந்த சகோதரனைப் போல கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி செந்தில் கூட்டணி போலவே விவேக் செல் முருகன் கூட்டணியில் பல படங்களில் அவர்களது காமெடி காட்சி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விவேக் ஒரு கோடி மரக்கன்று நடும் திட்டத்தை துவங்கி, தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அவரது மறைவுக்கு பின் அவர் விட்டுச் சென்ற அந்த உன்னத பணியை நடிகர் செல்முருகன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். ஒரு உண்மையான நண்பராக, ஒரு நல்ல விசுவாசியாகவும் இருந்து இன்றும் நடிகர் விவேக் விட்டுச் சென்ற மரக்கன்று நடும் திட்டப் பணியை நடிகர் செல்முருகன் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.





