தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் அதிகமாக வரும். ஏனென்றால் ரஜினி விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்களில் குடும்பக் கதையில் உருவான சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும். காமெடி இருக்கும். காதல் பாசம் போன்ற சென்டிமென்ட் பெண்களை கவரும்.
அதனால் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக ரஜினி விஜய் சிவகார்த்திகேயன் சூர்யா படங்கள் இருந்து வருகின்றன. அதிலும் ரஜினி படம் பார்க்க பலரும் குடும்பம் குடும்பமாக மனைவி பிள்ளைகள் என தியேட்டர்களுக்கு வரவே விரும்புபவர். அதனால் ரஜினி படங்கள் யு சான்றிதழ் பெற்ற படங்களாக தான் பெரும்பாலும் இருக்கும்.
ஆனால் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் ஏ சான்றிதழ் படமாக இருந்தது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் அனுமதி இல்லை என்பதால் வழக்கமான ரஜினி படம் போல குடும்பமாக வந்து பார்க்க முடியவில்லை. இதனால் பேமிலி ஆடியன்ஸ் கூட்டமே தியேட்டர்களில் இல்லை.
ஆனால் இந்த படத்தில் ஆபாசமான காட்சிகள் கிடையாது. படம் முழுக்க வன்முறை காட்சிகள்தான். அதுவும் சத்யராஜ் தயாரித்த எலக்ட்ரிக் சேரில் ஆட்களை வைத்து சாம்பலாக்கும் காட்சிகள்தான் படம் பார்ப்பவர்களை திகிலடைய வைக்கின்றன. அதனாலேயே இந்த படத்துக்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
கடந்த 7 நாட்களில் கூலி படம் 435 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில், முதல் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்த கூலி 3 நாட்களில் வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பது படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அதனால் கூலி படத்துக்கு யு/ஏ சான்று வழங்குமாறு கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
சிங்கப்பூரில் 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதால் யு/ஏ சான்றிதழ் கூலி படத்துக்கு கிடைத்த நிலையில் அங்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும் 4 நிமிட காட்சிகளை நீக்கி ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டர்களுக்கு வரவழைத்து அதிக வசூலை பெற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதை முதலிலேயே செய்திருந்தால் கூலி வசூல் எப்போதோ 500 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





