தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படும் ஒரு சிறந்த படைப்பாளியாக இருந்து வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்குனராகவே நடித்த அவர், தாவணி கனவுகள் படத்தில் இயக்குனராகவே சில காட்சிகளில் வந்தார்.
பிறகு அவர் இயக்கிய கொடி பறக்குது மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் பின்னணி குரலில் பேசிய பாரதிராஜா ஒரு கட்டத்தில் இயக்கத்தை குறைத்து விட்டு நடிகராகவும் மாறினார். நம்ம வீட்டுப்பிள்ளை திருச்சிற்றம்பலம் ஈஸ்வரன் பாண்டியநாடு குரங்கு பொம்மை மகாராஜா திரு மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு வயது 80 கடந்த நிலையிலும், சினிமாவில் அவர் நல்ல கேரக்டர்களில் தேர்வு செய்து நடிப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல ஹீரோக்களை நடிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது கேரக்டரை மிக அழுத்தமாக நேர்த்தியாக நடித்து அசத்தி விடுகிறார். சில காட்சிகளில் வந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது.
சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா, மலையாளத்தில் மோகன்லால் ஷோபனா நடித்த தொடரும் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு பாரதிராஜா எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பாரதிராஜாவை பெரிய அளவில் பாதித்த நிலையில் மனமுடைந்து அவர் காணப்பட்டார்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா கடந்த 2 மாதங்களாக சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அவரது மகள் ஜனனி வீட்டில் பாரதிராஜா இருக்கிறார். அங்கே தங்கி 2 மாதங்களாக ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் பாரதிராஜா நடித்த தொடரும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஆனாலும் மன ஆரோக்கியம் மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவு எடுத்து உள்ளனர். பாரதிராஜா மீண்டும் சென்னைக்கு எப்போது திரும்புவார் என்று தெரியவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.





