தமிழ் சினிமாவில் கடந்த 48 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை தந்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிறமொழி படங்களுக்கும் இசை தந்தவர். இசையால் தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி சொந்தமாக அவரே பாட்டு எழுதி அதற்கு அவரே இசையமைத்து அவரே தனது சொந்தக்குரலில் பாடி விடுவார். இளையராஜா பாடிய பாடல்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் உயிர் உருகும் ஒரு தனித்துவமான குரலில் இளையராஜா பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்ற பாடல்களாக ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.
இசையமைப்பாளர் இளையராஜா பல படங்களை தயாரித்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இளையராஜா இசை பணியோடு படங்களும் சொந்தமாக தயாரித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தருகிறது. கடந்த 1985ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தை தயாரித்தவர் இளையராஜா தான்.
அலைகள் ஓய்வதில்லை 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம். கடந்த 1982ம் ஆண்டில் வெளியான படம் கோழி கூவுது. பிரபு சில்க் ஸ்மிதா சுரேஷ் விஜி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படமும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமாக இருந்தது.
கடந்த 1981ம் ஆண்டில் இளையராஜா தயாரித்த படம் ஆனந்தகும்மி. இதை இயக்கியவர் பாலகிருஷ்ணா. அடுத்து 1985ம் ஆண்டில் இளையராஜா படத்தில் வெளியான படம் கொக்கரக்கோ. இந்த படத்தை இயக்கியவர் கங்கை அமரன். அடுத்து 1989ம் ஆண்டில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ராதா நதியா உள்ளிட்டோர் நடித்த படம் ராஜாதி ராஜா. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
கடந்த 1992ம் ஆண்டில் கமல்ஹாசன் குஷ்பு நடித்த சிங்காரவேலன் என்ற படத்தை இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கினார். இதுவும் இளையராஜா தயாரித்த படம்தான். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் விஜயகாந்த் கனகா நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டில் வெளியான படம் கோயில்காளை. இந்த படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார். 1990ம் ஆண்டு ராமராஜன் நடித்த படம் புதுப்பாட்டு என பல படங்களை இளையராஜா தயாரித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரிய வெற்றிப் படங்கள்தான்.





