தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் கடந்த 2000ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். அப்போது தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை எல்லாம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று துபாய் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நட்சத்திர இரவு ஷோ நடத்தினார்.
அதில் கிடைத்த பெரிய வருமானத்தை கொண்டு பல ஆண்டுகளாக இருந்த நடிகர் சங்க கடனை முற்றிலும் அடைத்தார். அவரது இந்த துணிச்சலான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ரஜினி கமல் போன்ற நட்சத்திர நடிகர்களையும் இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்த பெருமை கேப்டனுக்கே சேரும்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். இப்போது தேமுதிக கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். அவரது தம்பி விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமா நடிகராக வலம் வருகிறார். ஏற்கனவே சகாப்தம் மதுரை வீரன் படங்களில் நடித்த அவர் இப்போது படை தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
வருகிற 23ம் தேதி படைதலைவன் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் எம்எஸ் பாஸ்கர் கஸ்தூரி ராஜா யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் அன்பு இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கூறியதாவது, என்னுடைய அப்பா விஜயகாந்த் நடித்த சத்ரியன் ரமணா போன்ற படங்களில் நான் நடிக்க விரும்புகிறேன். என் அப்பாவிடம் உதவி பெற்ற பலர், எனக்கு உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு அப்படி ஏதாவது உதவி தேவைப்படும்போது கண்டிப்பாக அவர்களிடம் கேட்பேன். கேஜிஎப் மாதிரியான படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். எனது தந்தையைப் போல போலீஸ் ஆர்மி மேன் ரோல்களிலும் ராஜா கேரக்டர் ரோல் கிடைத்தாலும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகர் சண்முக பாண்டியன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





