நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. அதன்பிறகு 10 மாதங்களாக சூர்யா படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு வெங்கி அட்லூரி இயக்கிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்த நடிகர் சூர்யா இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் தீபாவளிக்கே ரிலீஸ் என்று சொல்லப்பட்டு கருப்பு படம் பல மாதங்களாக திரைக்கு வராத நிலையில் சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இந்த சூழலில் வருகிற மே 14ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் என்கிற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதில் திரிஷா ஆர்ஜே பாலாஜி ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் மன்சூர் அலிகான் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்காக ஒரு பாடலை சம்பளமே வாங்காமல் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இதற்காக நடிகர் சூர்யா சிம்புவுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை வழங்கியதாகவும் நேற்று தகவல் வெளியானது. இதற்கிடையே கருப்பு படத்தில் இருந்து சிம்பு பாடிய பாடல் வெளியாகி உள்ளது.
இந்த பாடல் காட்சியில் முழுக்க முழுக்க படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தான் கலர் கலரான கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு பல நிறங்களில் ஜிகினா உடையில் வந்து ஆட்டம் போடுகிறார். இடையிடையே சாய் அபயங்கரும் நடிகை சுவாசிகாவும் ஆடுகின்றனர். பாட்டின் கடைசியில் சுருட்டு பிடித்தபடி நடிகர் சூர்யா காணப்படுகிறார்.
சிம்பு பாடிய இந்த பாடல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவர் ஒரு பாடகராக நன்றாக பாடியிருக்கிறார் என்றாலும் இசை மிகவும் குளறுபடியாக உள்ளது. ரசிக்கும்படியாக இல்லை. பாடல் வரிகள் என்னவென்றே புரியவில்லை. அந்த பாடல் காட்சிகளில் வரும் விஷயங்களும் ரசிகர்கள் ரசிக்கும்படி இல்லை.
மேலும் படத்தின் நாயகன் சூர்யா இருக்கும் போது படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இந்த பாடல் காட்சி முழுவதும் வருகிறார். அதனால் ஹீரோ சூர்யாவா, ஆர்ஜே பாலாஜியா என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஆக மொத்தம் சாய் அபயங்கர், ஆர்ஜே பாலாஜி இருவருமே இந்த பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மூலம் ரசிகர்களின் வெறுப்பை அதிருப்தியை சம்பாதித்துள்ளனர் என்பதே கசப்பான உண்மை.





