நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பின்பு வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன்பிறகு பல படங்களில் டைட்டில் கார்டில் அவரே பெயரே பரோட்டா சூரி என்றுதான் இருக்கும். முன்னணி காமெடி நடிகரான பிறகு பரோட்டா காணாமல் போய் சூரி என்றுதான் குறிப்பிடப்படுகிறார்.
துவக்கத்தில் காதல், தீபாவளி, வின்னர் போன்ற சில படங்களில் நடித்திருப்பார் சூரி. அதன்பிறகுதான் காமெடி நடிகராக மாறி, முன்னணி நடிகர்களுடன் காமெடி செய்தார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது.
மேலும் விஷ்ணு விஷால், ஜெயம் ரவி, சசிக்குமார், விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நாயகர்களுடன் நடித்த வகையில் வெகு சீக்கிரமாகவே முன்னணி காமெடியனாக மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் சூரி. விஷ்ணு விஷாலுடன் குள்ள நரிக்கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் சூரி நடித்திருந்தார்.
இதனால் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்ட நிலையில், விஷ்ணு விஷால் தந்தை மூலம், 2.70 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்க பணம் தந்துள்ளார் சூரி. ஆனால் அதில் ஏதோ வில்லங்கம் ஏற்பட்டு, விஷ்ணு விஷால் அப்பா, சூரிக்கு நிலம் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சூரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் விஷ்ணு விஷால், சூரி நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அதன்பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் முன்பு அவர்கள் இணைந்து நடித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதே நேரத்தில் காமெடி நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கதாநாயகன் ஆகி விட்டார். அடுத்து விடுதலை 2, கருடன், கொட்டுக்களி என தொடர்ந்து அவரது படங்கள் வெளிவர இருக்கிறது.
இதையடுத்து மீண்டும் சூரியுடன் இணைய முயற்சித்து வந்த விஷ்ணு விஷால், அவர் தந்த மொத்த பணத்தையும் தந்து, மீண்டும் முறிந்து போன நட்பை புதுப்பித்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. விஷ்ணு விஷால், அவரது அப்பா மற்றும் சூரி இருக்கும் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார் விஷ்ணு விஷால். அதற்கு நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று சூரியும் பதில் தந்து இருக்கிறார். இதனால் அவர்களது பணப் பிரச்னை பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.





