கன்னட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரத்தில் 2ம் தேதி அன்று காந்தி ஜெயந்தி தினத்தில் உலகம் முழுவதும் வெளியானது. கன்னடம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அபாரமான வரவேற்பை பெற்றுள்ளது.
காந்தாரா சாப்டர் 1 படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை 8 நாட்களில் இந்த படம் 509 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலக அளவில் வசூலித்த மொத்த வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் நிச்சயமாக 800 கோடி முதல் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவலின்படி காந்தாரா சாப்டர் 1 படம் கர்நாடகாவில் 130 கோடி ரூபாய் இந்தியில் 130 கோடி ரூபாய் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 90 கோடி ரூபாய் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் 80 கோடி ரூபாய் தமிழகத்தில் 35 கோடி ரூபாய் கேரளாவில் 35 கோடி என இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கன்னட திரையுலகில் ரூ. 500 கோடி வசூலை கடந்த 2வது படம் என்ற பெருமையும் காந்தாரா சாப்டர் 1 படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படம் 1200 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு கன்னட படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பது பெரிய சாதனையாகும். இருப்பினும் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பிறகுதான் இந்த படம் லாபத்தில் அடி எடுத்து வைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் சுமார் 350 கோடி ரூபாய் வரை இந்த படத்திற்கான தியேட்டர் வியாபாரம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று 2வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மேலும் கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தமிழில் இட்லி கடை படம் தவிர பெரிய படங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை.
வரும் தீபாவளிக்கு தான் பைசன் காளமாடன் டீசல் டியூட் போன்ற படங்கள் தியேட்டர்களுக்கு வருகின்றன. அதனால் தமிழகத்தின் பல ஊர்களில் காந்தாரா சாப்டர் 1 படம் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போல் மற்ற மாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு நீடிப்பதால் இந்த வார இறுதிக்குள் இன்னும் வசூல் இன்னும் சில 100 கோடி ரூபாய் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





