பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், சுதந்திரத்திற்கு முன்பு கோலார் தங்க வயலில் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், பொங்கலன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது.
இதன் நடுவே 2017 ஆம் ஆண்டு கௌதம் மேனனுடன் இணைந்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். முதலில் சூர்யாவுக்கு தான் இந்த படம் சென்றது. அப்போதே டைட்டில் கார்டுடன் போஸ்டரும் வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா.
இதன் பிறகு விக்ரமுடன் இணைந்து விறுவிறுப்பாக படத்தை எடுத்தார் கௌதம் மேனன். இதில் சிம்ரன், ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, விநாயகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை கௌதம் மேனனே தயாரித்து இருந்தார். இதற்கான 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சில பல காரணங்களால் துருவ நட்சத்திரம் முடங்கியது.
இதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் துருவ நட்சத்திரத்தை கையில் எடுத்த கௌதம் மேனன் அதற்கான முழு பணிகளையும் முடித்தார். இதை எடுத்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நிறைவடைய, வரும் நவம்பர் 24 ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் குறித்து பல விஷயங்களை கௌதம் மேனன் பகிர்ந்து உள்ளார்.
ஒரு நாள் விக்ரம் எனக்கு போன் செய்து எதற்காக துருவ நட்சத்திரம் பாதியில் நின்றது. ஏன் சூர்யா இதனை விரும்பவில்லை என்று கேட்டார். நான் அவரிடம் துருவ நட்சத்திரத்திற்கான கதையை கூறினேன். ஏற்கனவே அவருக்கு இரண்டு படங்கள் கையில் இருந்தும் அதன் கதை பிடித்து போனதால் அவர் ஒத்துக் கொண்டார். நானும் இந்த திரைப்படத்திற்கான யுனிவர்சல் கான்செப்ட்டை வைத்துள்ளேன். படம் நன்றாக ஓடினால் நிச்சயம் இதற்கான இரண்டாம் பாகத்தை எடுப்பேன். துருவ், ஜான் என இரண்டு பெயர் விக்ரமுக்கு உண்டு. இன்னொரு பெயர் படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரிய வரும் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.





