பருத்திவீரன் படத்தில், அமீருக்கும் ஞானவேல்ரராஜா இருவருக்கும் இடையே இருப்பது பொருளாதார பிரச்னை மட்டும்தான். அதை பற்றி மட்டும்தான் பேச வேண்டும். ஒரு நல்ல படைப்பாளியை இழிவுபடுத்தி பேசுவது என்னை போன்றவர்களையும் பேசுவதற்கு சமம் என இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஞானவேல் ராஜாவுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அமீர் அண்ணாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என ஒரு அறிக்கையை திடீரென வெளியிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. ஏற்கனவே இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு பழனியப்பன், கவிஞர் சிநேகன் போன்றவர்களும் ஞானவேல் ராஜாவுக்கு எதிரான தனது கண்டன பதிவுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அமீரை பற்றி மிக தரக்குறைவான வார்த்தைகளில், ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்தது, பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஏனெனில் அமீர் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை அவரது படங்கள் நிரூபித்து இருக்கின்றன. அதனால், அவரை தனிப்பட்ட விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்றே அவர்கள் தங்கள் பதிவில் கூறியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி போன்றவர்களும் கருத்து சொல்லாமல், மவுனம் சாதித்தது பலரையும் அதிருப்தியடைய செய்தது. இதில் அவர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. எனவே, இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசாமல் விரைவில் சமரச முடிவு எட்டுவதே நல்லது என, பாரதிராஜாவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இதில் வருத்தம் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்திய நிலையில், ஒரு திடீர் அறிக்கையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,பருத்திவீரன் பிரச்னை, கடந்த 17 ஆண்டுகளாக நடந்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை, என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி என தெரிவித்துள்ளார்





