நடிகர் சித்தார்த், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். நடிகர் கமல்ஹாசனின் மிக தீவிரமாக ரசிகர். மணிரத்னம். கமல் இருவரும்தான் சித்தார்த்தின் சினிமா ஆசான்கள். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானார். தமிழை காட்டிலும் தெலுங்கில் சித்தார்த்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்துள்ளார். திரைக்கதை ஆசிரியர், பாடகராகவும் இருக்கிறார் சித்தார்த். அயலான் படத்தில் ஏலியனுக்கு பின்னணி பேசியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கானாவில் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி கோவிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி ராவை, சித்தார்த் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டில் அதிதி ராவுடன், சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, இப்போது திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் இருவரது காதல் குறித்தும் அடிக்கடி தகவல் பரவி வந்த நிலையில், வெளியில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இந்த ரகசிய திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர். கடந்த 2001ம் ஆண்டில் மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு 2007ம் ஆண்டில் மனைவியை பிரிந்தார். அதே போல் அதிதி ராவ், 2009ம் ஆண்டில், சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அடுத்து 2013ம் ஆண்டில் கணவரை பிரிந்து விட்டார்.
இந்நிலையில், மனைவியை விவகாரத்து செய்த சித்தார்த்தும், கணவரை விவாகரத்து செய்த அதிதி ராவும் இன்று 2வது திருமணம் செய்துக்கொண்டனர். அதிதி ராவின் தாய்வழி தாத்தா வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி அரசர் என்று கூறப்படுகிறது. அதனால் அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான இந்த கோவிலில் திருமணம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.





