துணிவு படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்திற்கு அடுத்த படமாக விடாமுயற்சி அமைந்தது. இந்த படத்தில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதனை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். அடல்ட் படமாக எடுக்கப்பட்ட அது, விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், நன்கு கல்லா கட்டியது. அந்த திரைப்படமும் எந்த விதத்திலும் போர் அடிக்காமல் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.
ஆனால் இதன் பிறகு ஆதிக் இயக்கிய எந்த திரைப்படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தை எடுத்து நொந்து போனார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தின் தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அங்கு அஜித்துடன் பழகும் வாய்ப்பு கிடைக்க, அவருக்கு தனது படத்தின் கதையைக் கூற, அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவிக்க குட் பேட் அக்லி உருவானது. அதற்கு முன்னதாக, விஷாலை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான இந்தத் திரைப்படம் சக்கை போடு போட்டது. இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் எஸ் ஜே சூர்யா. அவரது நடிப்பு ரசிகர்களை கட்டி போட, நூறு கோடி ரூபாய் பணம் பார்த்தது இந்த திரைப்படம். அது மட்டுமல்லாமல், மிகவும் சிக்கலான டைம் டிராவல் கதையை எளிமையாக விவரித்ததால் ஆதிக் பலராலும் பாராட்டப்பட்டார்.
இப்படியான சூழலில் தான் அவர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்திற்கான சூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் எடுக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே தற்போது வேலைகள் ஹைதராபாத்தில் ஆரம்பித்து இருக்கின்றன. அஜித் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். ஜூன் ஏழாம் தேதி வரை முதற்கட்ட படப்பிடிப்பை பட குழுவினர் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.





