இந்த ஆண்டு பல்வேறு திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெளியாகி இருந்தாலும், அவற்றில் சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் மனதைக் கவர்ந்து வெற்றி பெற்றன. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டாடா திரைப்படத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த கவின் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தந்தைக்கு மகனுக்குமான உறவு, காதலன் காதலியிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவற்றை சுவாரசியமாக காட்சிப்படுத்தி இருந்ததால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான குட் நைட் திரைப்படமும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதுவரை துணை நடிகராக நடித்திருந்த மணிகண்டன் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மீரா ரகுநாத் கதாநாயகியாக நடிக்க, ரமேஷ் திலக், ரேச்சல் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றனர். இந்த திரைப்படத்தை விநாயகன் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். குறட்டை என்ற ஒரு கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.
சொல்லப்போனால் கோலிவுட்டில் வித்தியாசமான கதை களத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்று கூறலாம். தனது வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதத்தில் சென்று கொண்டிருக்க, குறட்டை என்ற ஒன்றால் அவதிப்படும் இளைஞர், இதனால் அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை என கதையை சுவாரசியப்படுத்தி இருந்தார் இயக்குனர். கதைக்கு ஏற்றவாறு மணிகண்டனும் அழுத்தமாக நடித்து சபாஷ் போட வைத்தார்.
குட் நைட் திரைப்படத்தில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் மீரா ரகுநாத்தான். அனு என்னும் கேரக்டரில் அமைதியாக வந்த அவர் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் அனுவை போல் தனக்கு மனைவி வேண்டும் என்று இணையத்தில் பதிவிட ஆரம்பித்தனர். நடிகை மீரா ரகுநாத்தை கொண்டாடவும் செய்தனர்.
இவர் முதல் நீ முடிவும் நீ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார். அந்த திரைப்படத்திலேயே சற்று கவனம் பெற்ற மீரா, குட் நைட் இல் கொண்டாடப்பட்டார். இப்படியான சூழலில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. அவரது சொந்த ஊரான ஊட்டியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திரைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





