இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதுதான் என்னுடைய கடைசி படம் என ஏற்கனவே விஜய் அறிவித்து விட்டதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக மீண்டும் விஜயுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கிறார். பாபி தியோல் வில்லனாகவும் மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் கௌதம் மேனன் நரேன் பிரியாமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தெலுங்கில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தின் அப்பட்டமான ரீமேக் தான் ஜனநாயகன் படம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற ஒரு கதைக்களத்தில்தான் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழுவினர் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். லியோ மற்றும் தி கோட் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு விழா மலேசியாவில் நடத்தப்படுவது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் கடந்த 2 நாட்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தின் நீளம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் திரையில் ஓடும் என்று சொல்லப்படுகிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் படங்களே பார்க்க முடியாத சூழலில் ரசிகர்கள் உள்ளனர்.
அதனால் இவ்வளவு நீளமான அதிக நேரம் ஓடும் பெரிய படமாக ஜனநாயகன் உருவாகி உள்ளது என்ற தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது உண்மையல்ல. படம் இன்னும் சென்சாருக்கு செல்லாத நிலையில், சில தினங்களில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது. இது ஒரு தவறான வதந்தி என்றும் படத்தின் இறுதியான நீளம், படம் ஓடும் நேரம் இன்னும் முடிவாகவில்லை என்றும் இப்போது லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.





