தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர்களில் பா. இரஞ்சித்தும் ஒருவர். அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இதுவரை மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்களில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றவை.
நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் பா. இரஞ்சித்தின் ஸ்டைலிலேயே இல்லை என்றும் குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் ரொம்பவே இரிடேட்டாக இருந்ததாகவும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்தச் சூழலில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இரஞ்சித். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது.
கோலார் தங்க வயல் எனப்படும் கேஜிஎஃப்பில் வாழ்ந்த பழங்கால தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து இந்தப் படமானது உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் பா ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக கடந்த பல வருடங்களாகவே ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் விக்ரமும் தங்கலான் மெகா ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோவும் அதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படம் போன்றே தங்கலான் படத்திலும் சிறந்த இசையை கொடுக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் பின்னணி இசையுடன் காட்சிகளை பார்க்கும்போது ஏதோ மேஜிக் நடப்பது போன்ற உணர்வு இருக்கிறது.
வரலாறு, கற்பனை, இனம் ஆகிய்வை குறித்து அதிக பட்ஜெட்டில் படம் உருவாகியிருக்கிறது. எனவே இந்தப் படம் நிச்சயம் கல்ட் க்ளாசிக்காக இருக்கும். மேலும் படத்தில் பழங்குடியினருக்கான இசையும் இருக்கிறது. பா.இரஞ்சித்தின் படங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார். ஜிவி பிரகாஷின் இந்தப் பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. பா.இரஞ்சித் அடுத்ததாக சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.





