பொறியாளன் படத்தில் நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண், பிறகு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் ஓரளவுக்கு மக்களின் கவனத்தை பெற்றார். ஆனால் டைட்டில் வின்னர் ஆகவில்லை. அதன்பிறகு சக போட்டியாளரான ரைசாவுடன் பியார் பிரேமம் காதல் என்ற படத்தில் நடித்தார். அதுவும் அதிக வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காரை பார்க்கிங் செய்வதில் எம் எஸ் பாஸ்கருக்கும், ஹரீஷ் கல்யாணுக்கும் நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்திய இந்த படம் பெரிய வெற்றியை தந்தது. அடுத்து கடந்தாண்டில் வெளியான லப்பர் பந்து படமும் ஹரீஷ் கல்யாணை, முன்னணி நடிகராக மாற்றியது.
வளர்ந்து வரும் நடிகராக ஹரீஷ் கல்யாண் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரை போலவே நடிகர் கவினும் டாடா லிப்ட் ஸ்டார் பிளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். ஸ்டார் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க மறுத்த நிலையில் அதில் கவின் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாணிடம் உங்களுக்கும் நடிகர் கவினுக்கும் சினிமாவில் போட்டி நிலவுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண், காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்து வருகிறது. ரஜினி கமல் தொடங்கி அப்படித்தான் பார்த்து வருகிறோம். இப்போது வரை அந்த போட்டி தொடரவே செய்கிறது.
ஆனால் என்னை பொருத்தவரை போட்டி என்பது இரண்டு பேருக்கும் இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான். நாம் வளர்ந்த பிறகு நமது பார்வை மாறலாம். நாம் கடைசியாக நடித்த படத்தின் சாதனையை முறியடிப்பது தான் பெரிய சவால் என்று நினைக்கிறேன்.
கடைசியாக நான் நடித்த படம் மூலம் எனக்கு சில விஷயங்கள் கிடைத்தன. அந்த படத்தை விட இப்போது நடித்து வரும் படங்களில் சிறப்பாக என்ன செய்யலாம் என பார்க்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நிறைய நடிகர்கள் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். எல்லாருமே நல்ல படம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என ஹரீஷ் கல்யாண் கூறியுள்ளார்.





