எப்போதுமே தொழில்நுட்பங்களை கொண்டு வரும்போது அதில் நன்மை தீமை இரண்டுமே கலந்து வருகின்றன. குறிப்பாக சமீபகாலத்தில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி என்பது கணினி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை முன்னேற்றத்தை தந்து வருகிறது. சினிமாத் துறையிலும் அது கூடுதலாக எதிரொலிக்கவே செய்கிறது.
குறிப்பாக விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களை மீண்டும் திரையில் கொண்டு வர இந்த ஏஐ தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. தி கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டு இருந்தார். விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படத்தில் விஜயகாந்த் வரும் ஏஐ தொழில்நுட்ப காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நடந்த போது நடிகர்கள் விவேக் மனோபாலா மாரிமுத்து போன்றவர்கள் மறைந்து விட்டனர். சில காட்சிகளில் மட்டுமே அவர்கள் நடித்திருந்த நிலையில், பிறகு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் நடித்த காட்சிகள் திரையில் கொண்டு வரப்பட்டன.
இப்படி ஒரு விதத்தில் ஏஐ தொழில்நுட்பம் சினிமாத்துறையில் உதவி செய்தாலும், இறந்த பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி படங்களில் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் அனிருத் பயன்படுத்தி இருந்தார்.
அதே போல் எஸ்பிபி டிஎம் சௌந்தர்ராஜன் ஜெயச்சந்திரன் பவதாரணி என இறந்த பாடகர்களில் குரல்களை பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பத்தில் பாடல்களை உருவாக்குவது சகஜமாகி வருகிறது. இதற்கு பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். என் அப்பாவின் உண்மையான குரல் ஏஐ தொழில் நுட்பத்தில் சிதைந்து போவதை நான் விரும்பவில்லை. எஸ்பிபியின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உறுதியாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இதுகுறித்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஹாரிஸ் ஜெயராஜ் கூறியதாவது, நான் உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு தான் பாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பேன். அப்படி எவ்வளவு பேர் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். எதற்காக இறந்த பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.





