தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் கமல் ஹாசன் இடையில் அரசியல் பக்கம் கவனம் செலுத்தினார். ஆனால் அங்கு அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தன்னுடைய தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதன் காரணமாக கமல் ஹாசன் உற்சாக மிகுதிக்கு சென்றார்.
அதே உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 தூசு தட்டப்பட்டு மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. படத்தின் 95 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஏற்கனவே இந்தியன் 1 கிளாசிக் படமாக இருப்பதால் அதை தாண்டும் விதமாக இந்தப் படத்தை ஷங்கர் உருவாக்கிவருகிறார்.
அதேபோல் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்திருக்கிறார் கமல். இப்படி அடுத்தடுத்து கமிட்டாகி வந்த கமல் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக தற்போதைய தலைமுறை இயக்குநரில் சிறந்தவர் என்று பெயர் எடுத்திருக்கும் ஹெச்.வினோத்துடன் இணைந்திருக்கிறார். இந்தப் படம் கமலுக்கு 233ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தின் கதை கமலுடையது அதற்கு ஹெச்.வினோத் திரைக்கதை எழுதுகிறார் என்று ஒரு தகவலும் இல்லை இல்லை வினோத்துடையதுதான் கதை என்றும் பேசப்படுகிறது. எப்படி இருந்தாலும் வினோத்தின் மேக்கிங்கில் ஒரு சமூக அக்கறை எப்போதும் இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது இப்படம்.
கமல் இதில் இரட்டை வேடம் என்றும் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்புகூட கமல் ஹாசன் இந்தப் படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ வெளியானது கவனிக்கத்தக்கது. படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஹெச்.வினோத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹெச்.வினோத் – கமல் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே கமல் நடித்திருந்த வேட்டையாடு விளையாடு படத்துக்கு இசையமைத்திருந்தார். எனவே இதில் அவர் இணையும்பட்சத்தில் கண்டிப்பாக இசையில் ஒரு மேஜிக் இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதேசமயம் அனைத்து இயக்குநர்களும் அனிருத் பக்கம் சென்றுகொண்டிருக்க வினோத் மட்டும்தான் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





