இந்திய சினிமாவில் நடிகர் விஜய்க்கென தனி மார்க்கெட் உள்ளது. அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக சாதனை படைத்ததால், வசூல் சக்கரவர்த்தியாக விஜய் திகழ்ந்து வருகிறார். தற்போது அவர் லியோ திரைப்படத்தை தொடர்ந்து கோட் படத்தில் நடித்து வருகிறார்.
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பதை சுருக்கி தான் கோட் என படத்திற்கு டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்தத் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே அது தொடர்பான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வெங்கட் பிரபுவின் முந்தைய திரைப்படங்கள் தான்.
அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு என இரண்டு பேரும் ஹிட்களை கொடுத்த அவர், தற்போது விஜயுடனும் அதனை தொடர்வார் என்று நம்பப்படுகிறது. இந்தப் படத்திற்காக வயது குறைந்த வகையில் விஜய் காட்ட புதிய தொழில்நுட்பத்தை பட குழு கையில் எடுத்துள்ளது.
இதற்காக சமீப நாட்களாகவே மீசை இல்லாமல் காட்சியளிக்கிறார் விஜய். இது டைம் ட்ராவல்லை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் இருக்கும் விஜயும் நிகழ்காலத்தில் இருக்கும் விஜயும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சுவாரஸ்யமாக கலந்துகட்டி கூற முயற்சித்து வருகிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.
இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், யோகி பாபு, அஜ்மல், அரவிந்த் ஆகாஷ், வைபவ், இவானா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இருக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 2003 ஆம் ஆண்டு வெளியான கீதை திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து இருக்கிறார்கள். இப்படியான சூழலில் விஜய் யுவன் இசையில் ஒரு பாடல் பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை யுவன் சங்கர் ராஜாவே தெரிவித்திருக்கிறார். இதனால் குஷியாகி இருக்கும் ரசிகர்கள் யுவனின் இசையில் விஜயின் பாடலை கேட்க ஆர்வமுடன் இருப்பதாக கூறி வருகின்றனர்.





