தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது திறமையை வளர்த்து தற்போது கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.
சூர்யாவின் சமீப கால கதை தேர்வுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த ஜெய் பீம் திரைப்படம் அவரது கரியருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்திருக்கிறது. மேலும் சூர்யா போல் பிற முன்னணி ஹீரோக்கள் ஜெய் பீம் மாதிரியான கதைகளத்தில் நடித்தால் பல விஷயங்கள் இங்கே மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என திரை ஆர்வலர்கள் தொடர்ந்து கொள்கின்றனர்
ஜெய் பீம் படம் எப்படி சூர்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமோ அதேபோல்தான் சூரரைப் போற்று திரைப்படமும். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான அந்த படம் சூர்யாவுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. அந்த கதையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு வெளியிடப்பட்டது. அது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இதற்கிடையே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ செய்திருந்தார் சூர்யா. சில நிமிடங்கள் மட்டுமே திரையில் அவர் தோன்றினாலும் ஒட்டுமொத்த தியேட்டரையும் அதிர வைத்தார்.
இந்நிலையில் தனது அடுத்த ஐந்து படங்கள் குறித்த அப்டேட்டுகளை சூர்யா தன்னுடைய ரசிகர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி இப்போது கங்குவா படத்தில் நடித்து வருவதாகவும் இதனை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அது 43ஆவது படம் என்றும் கூறினாராம்.
இந்த இரண்டு படங்களுக்கு அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம். மேலும் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து விரிவாக ஒரு கதையை லோகேஷ் எழுதியிருப்பதாகவும் அந்த கதையை சூர்யாவிடம் சொல்லி அதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் லோகேஷ் கனகராஜின் கனவு படைப்பான இரும்புக்கை மாயாவி படத்தையும் சூர்யாவை வைத்து அவர் ஆரம்பிக்க வருகிறாராம். இப்படி வரிசையாக 5 படங்களை பவர்ஃபுல்லாக சூர்யா வைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.





