இந்திய திரைத்துறையில் தேசிய விருது உச்ச விருதாக கருதப்படுகிறது. அந்த விருதை பெற்றுவிட்டால் போதும் பெரும் அங்கீகாரம் கிடைத்துவிடும். இதன் காரணமாக படைப்பாளிகள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி திரைப்படங்களை மக்களுக்கு கொடுப்பார்கள். இதுவரை 68 தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய விருது ஜூரிக்களாக கேத்தன் மேத்தா,இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அதனையடுத்து பியூச்சர்டு பிலிமிஸ்,நான் பியூச்சர்டு பிலிம்ஸ் கேட்டகிரியில் விருதுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன.
தமிழிலிருந்து ஜெய் பீம், மாநாடு, சார்பட்டா பரம்பரை, கர்ணன், விநோதய சித்தம் உள்ளிட்ட படங்களும்; தெலுங்கிலிருந்து ஆர்.ஆர்.ஆர், சுகுமார் புஷ்பா,மலையாளத்திலிருந்து நயாட்டு, மின்னல் முரளி, ஹிந்தியிலிருந்து 83, சூர்யவன்சி, கங்குபாய் கத்தியவாடி, ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களும் போட்டியில் இருந்தன.மொத்தம் 283 படங்கள் போட்டியில் இருந்ததாக ஜூரிக்கள் தெரிவித்தனர்.
ஜெய் பீம் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து மாதவன் அந்தப் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தில் சிம்ரன் உள்ளிட்டோ நடித்திருந்தனர்.
தமிழில் கடைசி விவசாயி படத்துக்கும், அதில் நடித்த நல்லாண்டிக்கும் ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது கிடைத்திருக்கிறது. அதேபோல் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்துள்ளது. நான் பியூச்சர்டு பிலிம் கேட்டகிரியில் கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், சிறந்த கல்வி படமாக சிற்பிகளின் சிற்பங்கள் படத்துக்கும் கிடைத்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்துக்கு மோஸ்ட் பாப்புலர் பிரிவில் விருது கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட்டுக்கும் கிடைத்துள்ளது. மேலும், இசையமைப்பாளருக்கான விருது புஷ்பா படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆர்ஆர்ஆர் படத்துக்காக கீரவணிக்கும் கிடைத்துள்ளது. மேலும் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஆர்ஆர்ஆர் படத்தில் பாடிய கால பைரவாவுக்கு கிடைத்திருக்கிறது.





