நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கங்குவா. கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியான இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. கதை, திரைக்கதை ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே வாய் பேசாத கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. காதல் களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயமாக சூர்யாவுக்கு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாகும் என்று இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அஜீத்குமார் பிறந்த நாளில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் திரைக்கு வருவது கவனிக்கத்தக்கது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து தனது 45வது படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்தில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏற்கனவே மௌனம் பேசியதே ஆறு என 2 வெற்றிப் படங்களில் இந்த ஜோடி நடித்துள்ள நிலையில் 3வது முறையாக இந்த படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா நெடுஞ்சாலை கருடன் படங்களில் நடித்த ஷிவதா மற்றும் நட்டி யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியே நடிப்பதாகவும், அவர் வக்கீல் கேரக்டரில் வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இதற்கிடையே சூர்யா 45 படத்தின் டைட்டில் பேட்டைக்காரன் என்ற தகவல் கசிந்துள்ளது. ரஜினி நடித்த பேட்ட விஜய் நடித்த வேட்டைக்காரன் ஆகிய டைட்டில்களில் பாதி பாதியாக சுட்டு, பேட்டைக்காரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற பொங்கலுக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக ஆர்ஜே பாலாஜி அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





