விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவிலும் லண்டனிலும் இயக்கம் தொடர்பான படிப்பை படித்துவந்தார். கண்டிப்பாக அவர் ஹீரோவாக அவர் அறிமுகமாவார் என்று பலராலும் கணிக்கப்பட்ட சூழலில் திடீரென்று குறும்படத்தை இயக்கினார். புல் தி ட்ரிக்கர் என்று பெயர் கொண்ட அந்தப் படம் அவரது திறமையை காண்பிக்கும்படியாகவே இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக வலம் வரலாம் என பேச ஆரம்பித்தனர்.
இந்தச் சூழலில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக விஜய்யை வைத்து முதல் படம் இயக்குவார் என்றும் அவரது சிபாரிசில்தான் இயக்குநர் ஆவார் என்றும் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். அவர் அப்படி அறிமுகமானதை அடுத்து திரைத்துறையில் ஏகப்பட்ட தகவல்கள் உலா வருகின்றன.
அதாவது விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் லண்டனில் இருக்கும் தனது தந்தை வீட்டில் மகன் மற்றும் மகளுடன் இருக்கிறார். அவர்களுக்கும் விஜய்க்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றும்; லைகா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரனும் சங்கீதாவின் தந்தையும் நெருக்கமான நண்பர்கள். எனவே அவர்தான் தனது பேரனை இயக்குநராக அறிமுகப்படுத்த சுபாஸ்கரனிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது அனுமதி இல்லாமல் லைகா பேனரில் மகன் அறிமுகமாவதை விஜய்யும் விரும்பவில்லை என தகவல்கள் கசிகின்றன. இப்படி ஒருபக்கம் சஞ்சய்யின் தனிப்பட்ட விஷயம் குறித்து தகவல்கள் கசிய மறுபக்கம் அவரது ஃப்ரொபஷன் குறித்தும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதாவது சஞ்சய்க்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராதான் மேனேஜர் என்று கூறப்படுகிறது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதேபோல் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என அறிவிப்பு வெளியானாலும் அவரது முதல் படத்தில் ஹீரோ யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதனையடுத்து விஜய் சேதுபதி அல்லது ஜீவா நடிப்பார்கள் என முதலில் கூறப்பட்டது. இப்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அதர்வா, கவின், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.





