தமிழ் சினிமாவில், நடிகராக அல்லது நடிகையாக வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஏதாவது ஒரு சூழலில் அப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைத்து, ஒரு படத்தில் நடித்து மக்களுக்கும் பிடித்து விட்டால், அவர்களது வாழ்வில் சுக்கிர திசைதான். வாழ்வில் அடுத்தடுத்த உயரங்களை அடைந்து, வேற லெவலில் வாழ்க்கை மாறிய நடிகர், நடிகையர் பலர் உண்டு.
அந்த வகையில்தான் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, சத்யராஜ், கவுண்டமணி, யோகிபாபு, சந்தானம், சூரி என அந்த காலம் முதல் இந்த காலம் வரை, சாதாரண மனிதர்களாக சினிமா பயணத்தை துவங்கி, உச்சம் தொட்ட நட்சத்திரங்கள் பலர். இந்த அளவுக்கு ரசிகர்களால் தங்களது வாழ்வு உயர்வடையுமா என அவர்களே கூட நினைத்துப் பார்க்காத அதிசயங்கள் அவர்களது வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது.
அதே வேளையில் நடிக்கும் படங்களில், சில விஷயங்களை இயக்குநர்கள் முடிவு செய்தாலும் ஒரு கட்டத்தில் தன்னுடன் ஜோடி சேர வேண்டிய நடிகர், நடிகை குறித்து அவர்களே விருப்பம் தெரிவிப்பதும் உண்டு. அந்த வகையில் பெரிய நடிகர்கள், இந்த படத்தில் எனக்கு ஜோடியாக இவர் நடிக்கட்டும் என்று கூறுவதெல்லாம் எப்போதுமே சகஜமான விஷயம்தான். அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதாலும், அந்த கதாபாத்திரத்துக்கு அவர் ஏற்றவராகவும் இருப்பார் என படத்தின் நாயகன், நாயகியாக அவர்கள் கருதுவதுண்டு.
தமிழ் சினிமாவில், ஒரு காலகட்டத்தில் நல்ல நடிப்பாற்றல் கொண்ட நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. வானவில் என்ற படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், விருமாண்டி, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பின் படங்களில் நடிக்கவில்லை. மற்ற மொழி படங்களிலும் அவர் நடித்ததாக தெரியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி, இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதற்கு முன், மாறா என்ற மாதவன் நடித்த படத்தில், சில காட்சிகளில் மட்டும் அபிராமி நடித்திருந்தார். ஆனால் அப்போது ஸ்லிம்மான தோற்றத்தில் அழகான இளம்பெண்ணாக காணப்பட்ட அபிராமி, இன்று ஆண்டியாக, குண்டான பெண்மணியாக இருப்பதால், அதற்கேற்றபடியான கேரக்டர்களில் மட்டும்தான் நடிக்க முடியும்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அபிராமி, தமிழ் சினிமாவில் நடிக்கிற அனுபவம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. உயரமான ஹீரோக்களுடன் நான் நடித்தேன். ஆனால், என்னுடைய உயரம் காரணமாக, சில ஹீரோக்கள் என்னுடன் நடிக்க விரும்பவில்லை என்பதை தெரிந்துக்கொண்டு வருத்தப்பட்டேன், என்று கூறியிருக்கிறார். ஆனால் குஷ்பு பாண்டியராஜனுக்கும் ஜோடியாக நடித்தார். உயரமான நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களுக்கும் ஜோடியாக நடித்தது எப்படி என புரியவில்லை என்கின்றனர் ரசிகர்கள்.





