நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் ரிலீஸாவது ஏகே ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
அஜீத்குமார் படம் ரிலீஸாகிற அதே தேதியில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை என்ற படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் சத்யராஜ் ராஜ்கிரண் பார்த்திபன் நித்யாமேனன் என முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
குட் பேட் அக்லி மற்றும் இட்லி கடை என 2 படங்களையுமே உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் முவீஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. இப்படி ஒரே நாளில் 2 பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவது அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கும் வசூல் ரீதியாக லாபத்தை சற்று பின்னடைவை கொடுக்கும். ஏனெனில் அஜீத்குமார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டில் மாஸ் ஹிட் கொடுத்த ராயன் படத்துக்கு பிறகு மீண்டும் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளியாகிறது. வணங்கான் படம் தந்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய் இதில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதும் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் மீண்டும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்திருக்கிறார்.
இந்த சூழலில் இட்லிகடை படம் குறித்த வியாபாரத்தில் வினியோகஸ்தர்கள் தரப்பில், இட்லி கடை படம் ரிலீஸாகிற அதே நாளில்தான் அஜீத்குமார் நடித்த படமும் வெளியாகிறது. அதனால் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம். அதிக விலை கொடுத்து வாங்கினால் எங்களுக்கு போதிய லாபம் கிடைக்காது என்றும் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் இட்லிக்கடை படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இட்லிகடை படம் ரிலீஸ் வருகிற ஏப்ரல் 10க்கு பதிலாக ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.





