நடிகர் தனுஷ் என்ற அடையாளத்தை விட வருங்காலத்தில் இயக்குனர் தனுஷ் என்பதுதான் அவரது முக்கிய அடையாளமாக மாறிவிடுமோ என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு சமீபகாலமாக படங்களை இயக்குவதில் தனுஷ் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் போலவே அவரும் எதிர்காலத்தில் இயக்குனராகவே பெரிய அங்கீகாரம் பெற வாய்ப்பு உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் ரேவதி ராஜ்கிரண் நடித்த ப பாண்டி என்ற படத்தை முதன் முறையாக தனுஷ் இயக்கினார். இதில் பிளாஷ்பேக் காட்சியில் சின்ன வயது ராஜ்கிரண் – ரேவதியாக தனுஷூம் செபாஸ்டின் மடோனாவும் நடித்திருந்தனர். ப பாண்டி படம் வரவேற்பு பெற்ற படமாகவே அமைந்தது.
தொடர்ந்து தனது 50வது படம் ராயன் படத்தை தனுஷ் இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். அபர்ணா முரளி துஷாரா விஜயன் செல்வராகவன் பிரகாஷ் ராஜ் எஸ்ஜே சூர்யா சந்தீப் கிஷன் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. ஏஆர் ரகுமான் இசையில் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
ஆனால் தனுஷ் இயக்கிய 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது. இதில் தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை தனுஷ் அறிமுகப்படுத்தி இருந்தார். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இப்போது நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். டில்லியில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் இயக்கிய 4வது படம் இட்லி கடை வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்த படம் அந்த தேதியில் வெளியாகாது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இப்போது இட்லி கடை ஷூட்டிங் தாமதம் காரணமாக வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் இல்லை என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருக்கிறார்.
இதுபற்றி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியதாவது, இட்லி கடை படத்தில் தனுஷ் நித்யாமேனன் நடிக்கும் சில காட்சிகளுக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவேண்டியுள்ளது. இருவரது கால்ஷீட்டும் ஒரே தேதிகளில் கிடைக்காததால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளோம். தனுஷ் நித்யாமேனன் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கி முடித்த பிறகு, இட்லி கடை ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அந்த தேதியில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





