தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இங்கு தனி மார்க்கெட் இருப்பதால், விஜயின் வருமானம் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டைத் தாண்டி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்படி பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாக விளங்கும் அவர் திடீரென, திரை உலகை விட்டு வெளியேறுவதாக வெளியிட்ட அறிவிப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அரசியலுக்குச் சென்று இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆரம்பம் முதலே தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் செய்து வந்தார். அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என பலரும் கூறி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி இருப்பதாக விஜய் அறிவித்தார்.
அரசியலில் ஆழ மட்டுமல்ல, அகலத்தையும் அறிந்து தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விஜய் தெரிவித்தார். தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தை தொடர்ந்து, மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதன் பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடிகர் விஜய் பரிசளித்து கௌரவித்தார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டு அவர் பரிசுகளை வழங்கினார்.
- சமீபத்தில் திருநெல்வேலி தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள வெள்ள பாதிப்பினால் உடைமைகளை இழந்த நபர்களுக்கும், விஜய் உதவினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் மாணவர்களுக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் அவர் தற்போது, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





