தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக 48 ஆண்டுகளாக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் இளையராஜா. இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடபடுபவர். இப்போதும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இருக்கிறார். இன்று தனது பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.
சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் இன்று இளையராஜா தனது பிறந்த நாளை கேக் வெட்டி தனது ரசிகர்களுடன் கொண்டாடினர். அப்போது அவர் கூறியதாவது, துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் போனில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு மிகவும் நன்றி.
இன்று என்னுடைய பிறந்த நாளில் ஒரு இனிப்பான செய்தியை சொல்லப் போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால் அதே ராயல்பில் ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வர் இதற்கு வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
என் பாடல்களை எல்லா சூழ்நிலையிலும் எந்த உணர்விலும் கேட்கலாம். என்னுடைய பாடல்கள் டாஸ்மாக் சரக்கு இல்லாமலேயே போதை ஏற்றுபவை என்று இசைஞானி கூறியிருக்கிறார். இளையராஜாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்தி உள்ளார். அதில் இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும். முன்பே இதை வலியுறுத்தி இருக்கிறேன். விரைவில் அதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறேன் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இளையராஜா 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த பிறகுதான் தமிழ்நாட்டில் அதை அரங்கேற்றம் செய்வதாக முதலில் கூறியிருந்தார். ஆனால் இப்போது வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாட்டில் அதை வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்வதாக தனது பிறந்த நாளில் அறிவித்திருப்பது இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதாக ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரது பிறந்த நாளில் இன்று அந்த விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்விழா தள்ளிப் போயுள்ளது. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3 நாளைதான் என்றாலும், அது கருணாநிதி பிறந்த நாள் என்பதால் ஜூன் 2ம் தேதியே தனது பிறந்த நாளை இளையராஜா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.





