நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. குட் பேட் அக்லி படத்தில் அஜீத்குமாருடன் திரிஷா அர்ஜூன் தாஸ் சுனில் பிரசன்னா பிரியா வாரியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார்.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படம் தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியானது. நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த அமர்க்களம் வரலாறு தீனா சிட்டிசன் வாலி உள்ளிட்ட படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து உருவான இந்த படம் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இந்த படம் உலக அளவில் 230 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
குட்பேட் அக்லி படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்சன்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அஜீத்குமார் படத்தில் தனது இசையில் உருவான பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு சட்டபூர்வமாக உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், பாடல்களை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டதாக கூறப்படும் அந்த உரிமையாளர் யார் என்பது குறித்து குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் அந்த மனுவில் இளையராஜா தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, வரும் 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரனும் சில கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். எங்களிடம் அனுமதி கேட்டால் தந்துவிடுவோம். ஆனால் எங்களது சொத்தை மற்றவர்கள் கேட்டாமல் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஜீவி பிரகாஷ்குமாரின் இசை எடுபடாது, படத்துக்கு வெற்றி தராது என்பதால் என் அண்ணனின் இசையை பயன்படுத்தியது பெரிய தவறு என்றும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.





