தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். சிம்பொனி இசைக்கு சொந்தக்காரர். 85 வயதிலும் இன்னும் பிஸியாக இருப்பவர்.
இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா என்ற 2 மகன்கள் உள்ளனர். அவரது மகள் பவதாரணி கடந்த ஆண்டில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இளையராஜா இசையில் பல படங்களில் பவதாரணி பாடியிருக்கிறார்.
குறிப்பாக மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் பவதாரணிக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மச்சானா பாடல்தான் பவதாரணி பாடிய முதல் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெக்கூலியர் வாய்ஸ் என்ற சொல்லப்படும் பவதாரணியின் குரலில் ஒலித்த பாடல்கள் ரசிகர்களின் மனம் நிறைந்தவை.
இந்நிலையில் மகள் பவதாரணியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு இசைஞானி இளையராஜா வெளியிட்ட ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது, என்னுடைய மகள் பவதாரணி என்னிடம் பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க வேண்டும் என்று விரும்புவதாக ஒரு முறை கூறியிருந்தார். அவர் கடைசியாக விருப்பப்பட்ட விஷயமும் அதுதான்.
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்தபோது மாணவிகள் பல குழுக்களாக வந்து பாடல்களை பாடிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பின்பு எனக்கு பவதாரணி சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் ஆசைப்பட்டது போல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய ஒரு இசைக் குழுவை தொடங்கப் போகிறேன். இதற்காக மலேசியாவில் ஏற்கனவே 2 குழுக்களை தேர்வு செய்து விட்டேன்.
உலகம் முழுவதும் இருந்து ஆட்களை தேர்வு செய்து இந்த இசைக் குழுவை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதில் இணைய விரும்பும் மாணவிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கொடுத்த பின்னர் ஆடிசன் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்த இசைக்குழு தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கையில் ஆண்டவனை வேண்டிக் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.





