சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். லியோ படத்திற்குப் பிறகு இதனை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஜெயிலரைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன.
தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவது அதன் அறிமுக வீடியோவிலேயே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் துறைமுகம் சார்ந்த காட்சிகள் நிறைய இருப்பதாலேயே விசாகப்பட்டினத்தில் செட் போட்டு இதற்கான சூட்டிங்கில் ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக பிற மாநில நடிகர்களையும் படத்தில் இடம்பெற வைத்துள்ளார்கள். அதன்படி தெலுங்கு சினிமாவில் இருந்து நாகர்ஜுனா, கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சவுபிர் ஷாகிர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலிவுட் திரை உலக நட்சத்திரம் அமீர்கான் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கன்னட சினிமாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உபேந்திரா இது குறித்து அதிகாரப்பூர்வமாகவே பேசி இருந்தார். ஒரே காட்சியில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா ஆகியோர் வருவார்கள் என்றும் அப்போது திரையரங்கமே அதிரும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே. கூலியில் ரஜினிகாந்த் தேவா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு நண்பனாக வருகிறார் சத்யராஜ். அவருக்கு ராஜசேகர் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சத்யராஜ் மகளாக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து சிக்குடு பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. தற்போது அதன் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் டி ராஜேந்தர் பாடியது நம் அனைவருக்கும் தெரியும். அவர் அனிருத்துடன் இணைந்து பாடியது போன்ற வீடியோவைதான் தற்போது படக்குழு வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





