இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1990களில் வந்த படங்கள் எல்லாமே மெகா ஹிட் படங்கள்தான். ஜெண்டில் மேன் படத்துக்கு பிறகு காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என ஷங்கர் இயக்கிய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
ஷங்கர் இயக்கிய படங்களை பொருத்த வரை பிரமாண்டத்தை கடந்தும் ஏதேனும் சமுதாய விழிப்புணர்வு கருத்துகளையும் தனது ஹீரோக்கள் மூலம் பேச வைத்தார். கல்வி வியாபாரம், அரசியல், லஞ்சம் ஊழல் என ஏதேனும் நல்ல கருத்துகளை மையப்படுத்தி தான் அவரது படங்கள் இருந்தன. மேலும், காட்சிக்கு காட்சி பிரமாண்டத்தால் ரசிகர்களை மிரள வைத்தார்.
ஆனால் இப்போது வெளிவந்துள்ள இந்தியன் 2 படம், ஷங்கர் படம்தானா என்று ரசிகர்கள் யோசிக்கும் அளவுக்கு இருப்பதுதான், விசித்திரமாக உள்ளது. ஏனெனில் காட்சிக்கு காட்சி ரசிக்கும்படியாக பல படங்களை தந்த இயக்குனர் ஷங்கர் இப்படி ஒரு சொதப்பலான படத்தை எப்படி எடுத்தார் என்றுதான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக 28 ஆண்டுகளுக்கு முன்வந்த இந்தியன் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருந்தார். இதில் சுதந்திர போராட்ட தியாகி சேனாபதி, நாட்டில் பெருகியுள்ள லஞ்சம் ஊழலை கண்டு ஆவேசப்படுவார். ஒரு கட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களை எல்லாம் குத்திக் கொலை செய்வார். அவரால் நாட்டில் லஞ்சம் என்ற சொல்லை சொல்லவே அரசு அதிகாரிகள் அச்சப்படும் சூழல் உருவாகும்.
ஆனால் ஒரு கட்டத்தில் ஆர்டிஓ அதிகாரியான அவரது மகனே, லஞ்சம் வாங்கிவிட்டு பழுதான பள்ளி வாகனத்துக்கு உரிமம் தந்து குழந்தைகள் பலரது சாவுக்கு காரணமாகி விடுகிறார். இதனால் ஆவேசமடையும் இந்தியன் தாத்தா, மகன் என்றும் பார்க்காமல் இறுதியில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்வதுதான் படத்தில் கிளைமாக்ஸாக இருந்தது.
இந்நிலையில் இந்தியன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது, கமல் அல்ல என்ற தகவல் வந்துள்ளது. அதாவது காதலன் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஷங்கரிடம் ரஜினி, தனக்காக ஒரு கதை செய்யுமாறு கூறியிருக்கிறார். அப்போது ரஜினிக்காக உருவானதுதான் இந்தியன் படக்கதை. இந்த படத்துக்கு முதலில் வைத்த பெயர் பெரிய மனுஷன். ஆனால் ரஜினி அப்போது கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிஸியாக இருந்திருக்கிறார். அதன்பிறகுதான், கமல் நடிப்பில் இந்தியன் என்ற பெயரில் இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார்.





