நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள படம் ஜனநாயகன். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டு 2024ல் பிப்ரவரி 2ம் தேதி அறிவித்த விஜய் தி கோட் படத்துக்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன். அதன்பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்துவேன் என திட்டவட்டமாக அறிவித்தார். அதன்படி அவர் நடித்துள்ள 69வது படம் ஜனநாயகன் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஆனால் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து முதல்வரானால் மட்டுமே சினிமாவில் இருந்து அவர் முற்றிலும் விலகுவது உறுதியாகும். ஒருவேளை தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்தால் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையே எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் முதலில் அரசியல் இல்லை என்று சொல்லப்பட்டது. இது அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக நல்ல பொழுதுபோக்காக ரசிகர்களுக்கு அமையும் என்றும் சொல்லப்பட்டது.
அதே நேரத்தில் தெலுங்கில் நடிகர் பாலய்யா நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீ மேக் தான் ஜனநாயகன் படம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த படத்தின் திரைக்கதையை அப்படியே உல்டாவாக்கி விஜய்க்கு ஏற்ப சில காட்சிகளை மாற்றியமைத்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் திரைக்கு வருகிறது. அதனால் படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் சில வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் விஜய் அப்போது அதை மறுத்திருக்கிறார். இதில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் வேண்டவே வேண்டாம். நடுநிலையான ரசிகர்களுக்கு அது அதிருப்தியை தரலாம் என்றும் விஜய் அப்போது இயக்குனரிடம் கூறியிருக்கிறார். அதனால் அந்த பஞ்ச் டயலாக்குகள் நீக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் சமீபத்தில் இயக்குனர் எச் வினோத்தை தொடர்பு கொண்ட நடிகர் விஜய், படத்தில் அரசியல் சார்ந்த அனைத்து பஞ்ச் டயலாக்குகளையும் வைத்து விடுங்கள். அரசியல் களத்தில் இறங்கி விட்டு இனி அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேடையில் பேசுவதை திரையிலும் பேசி தான் ஆக வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆளுங்கட்சிக்கு எதிரான அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகளுடன் ஜனநாயகன் படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது.





