துணிவு திரைப்படத்திற்குப் பிறகு அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒன்று விடாமுயற்சி திரைப்படம். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி டைட்டில் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் அறிவிப்பை விட்ட லைகா நிறுவனம், விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்படுவதாக தெரிவித்தது.
ஆனால், ஐந்து மாதங்களுக்கு பிறகு அக்டோபரில் தான் இதன் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அஜர்பைஜான் நாட்டில் இதற்கான சூட்டிங் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் அஜித்துடன் ஆரவ் அர்ஜுன் ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். அஜித்திற்கு ஜோடியாக திரிஷா இடம் பெற்றுள்ளார்.
படப்பிடிப்பின் போது, அஜித் மற்றும் ஆரவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார். அதில் இருவரும் பயணித்த கார் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் இடம் பெற்று, ரசிகர்களை பதைப்பதைப்புக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் விடாமுயற்சி படப்பிடிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த இடைவெளியில், மார்க் ஆண்டனி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்தார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் விதமாக போஸ்டரில் அவர் மூன்று கெட்டப்புகளில் இருந்தார். அதில் நடு விரலை காட்டிக் கொண்டும் அஜித் இருந்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இந்தப் படத்தை மைதிலி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதன் நடுவே விடா முயற்சி திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கி இருப்பதால், அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறார்.
இப்படியான சூழலில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் காட் பிளஸ் யூ மாமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக இதன் சூட்டிங் நடைபெற்ற நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாவதாக மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது போஸ்டரில் அஜித் கறுப்பு கண்ணாடி அணிந்து விட்டு தக்காக காட்சி அளிக்கிறார். அந்தக் கண்ணாடியில் எதிரொளியாக பில்லா திரைப்படத்தின் காட்சி இடம் பிடித்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். இதைப் பார்த்து உற்சாகமடைந்திருக்கும் அவர்கள், ஆதிக் ரவிச்சந்திரன் எதையோ படத்தில் வைத்திருப்பதாக கொண்டாடி வருகின்றனர்.





