நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஆண்டில் மார்க் ஆண்டனி, இந்த ஆண்டில் மதகத ராஜா ஆகிய படங்கள் விஷாலுக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டடம் கட்டுவதற்காக பல முயற்சிகளை நடிகர் சங்க நிர்வாகிகள் எடுத்த நிலையில் பல்வேறு சிக்கல்களையும் சிரமங்களையும் கடந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கட்டட கட்டுமான பணிகள் தொடங்கியது. ஆனால் சங்கத்துக்குள் நிலவிய பல பிரச்னைகளால் 60 சதவீதம் மட்டுமே கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் சங்கத்தின் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன போதிய வங்கிக்கடன் கிடைக்காததால், நடிகர்கள் சிலர் நிதியுதவி வழங்கினர். இதன் மூலம் போதுமான தொகை நிதியாக திரட்டப்பட்டது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்ட சங்க கட்டட கட்டுமான பணிகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி இந்த கட்டுமான பணிகளை நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும் விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். திரையரங்கம் திருமண மண்டபம் நடிகர் சங்க அலுவலகங்கள் உடற்பயிற்சி கூடம் நடிப்பு பயிற்சி பள்ளி என பல்வேறு வசதிகளுடன் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் திறப்பு விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் ஜூலையில்தான் நிறைவடையும்.
நீங்கள் அனைவரும் இந்த விழாவுக்கு வரவேண்டும்; வந்து எங்களை வாழ்த்த வேண்டும். அதன் பிறகுதான் எனது திருமண விழா. இது உங்களுடைய கட்டிடம். நடிகர் சங்கம் கட்டிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமாத்துறைக்காக கட்டப்பட்ட கட்டிடம். அம்மாக்கள் பெரியவர்கள் சிரித்த முகத்துடன் விழாவிற்கு வர வேண்டும். வாசலில் தான் நான் நிற்பேன், உங்களை எல்லாம் வரவேற்பேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.





