சில அநாகரிகமாக கேள்விகளை சிலர் எப்போதுமே பார்ப்பவர்களிடம் கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக படித்து முடித்தவர்களிடம் வேலை கிடைக்கலையா என்று கேட்பதும், திருமணம் ஆனவர்களிடம் குழந்தை இல்லையா என்று கேட்பதும் திருமண வயது ஆனவர்களை இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா என்று கேட்பதும் அவர்களது பழக்கமாக இருக்கிறது.
பொதுவாக மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பர்சனல் என்பது இருக்கிறது. திருமணம் வேலை குழந்தை போன்றவை எல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்த தனிப்பட்ட விஷயங்களாக இருக்கின்றன. அதுபற்றி பொதுவெளியில் கேள்வி கேட்பது அநாகரிகம் என்ற உணர்வு பலருக்கும் வருவதே இல்லை.
குறிப்பாக திருமணம் செய்த தம்பதிக்கு ஏதேனும் சில மருத்துவ காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிலர் அதை நோண்டி நோண்டி கேள்வி கேட்பதுடன் குறிப்பிட்ட டாக்டர், சக்தி மி்கக கோவில், வைத்தியங்கள் பரிகாரங்கள் என்று கதை கதையாக சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
இது அவர்கள் காட்டும் அக்கறையை போல தோன்றினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தர்மசங்கடத்தை ஒருவித மனக்கவலையை எரிச்சலை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதே இல்லை. சில தனிப்பட்ட விஷயங்களை கண்டும் காணாமல் நடந்துக்கொள்வதே மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் இருக்கும்.
இதுபோன்ற ஒரு சிக்கலை நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் திருமணம் எப்போது திருமணம் எப்போது என்று அவரை கேட்டு எரிச்சலடைய வைக்கின்றனர். இதுகுறித்து அவரும் பலமுறை பதில் சொல்லியும் இன்னும் சிலர் அதே கேள்வியை கேட்டு அவரை விரக்தியடைய செய்து விடுகின்றனர்.
சமீபத்தில் அதே கேள்வி அவரிடம் கேட்ட போது சிம்பு கூறியதாவது, எனக்கு திருமணம் நடக்கும்போது நடக்கும். தனியா இருக்கிறதும் யாரோ ஒருவர் கூட இருக்கிறதும் முக்கியம் கிடையாது. நீங்க ஒழுங்கா நிம்மதியா இருக்கீங்களா என்பது தான் முக்கியம். சந்தோசமா இருக்கீங்களா, நாலு பேரை நிம்மதியா பார்த்துக் கொள்கிறீர்களா? அது போதும். நான் இப்படி பேச காரணமே வாழ்க்கையில ரொம்ப அடிவாங்கி இருக்கேன் என்று சிம்பு கூறியிருக்கிறார்.





