லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கியிருக்கும் நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஐந்தாவதாக இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஏற்கனவே விஜய்யும் லோகேஷும் இணைந்து மாஸ்டர் படத்தை கொடுத்ததாலும்; விஜய்க்கு லியோ படத்தின் வெற்றி ரொம்பவே அவசியப்படுவதாலும் இப்படத்தை ரசிகர்கள் உச்சக்கட்டமாக எதிர்பார்க்கின்றனர்.
படம் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் வசூலில் பல படங்களின் சாதனையை முறியடிக்கும் என நம்பப்படுகிறது. படத்தை முதலில் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக இருந்த சூழலில் தற்போது செவன் ஸ்கீர்ன் நிறுவனமே வெளியிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோதான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லியோவின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேர பெற்றது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பு உறுதியாகிவிட்டதால் ரஜினியின் 171 படத்தை முடித்துவிட்டு கைதி 2வுக்கு செல்கிறார்.
ரஜினியுடன் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் இதன் மூலம் பிரமாண்ட வெற்றியை லோகேஷ் கொடுப்பார் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழலில் லியோ படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதாவது லோகேஷ் கனகராஜை தொடர்புகொண்ட அவர், “ஆல் தி பெஸ்ட் லோகேஷ் கனகராஜ். லியோ ட்ர்யெலர் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக படம் வெற்றியடையும். வாழ்த்துகள்” என சொல்லியிருக்கிறார். அதேபோல் தலைவர் 171 படத்தின் கதையை லியோ ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் சொன்னார் லோகேஷ்.
அதற்கு விஜய்யோ, “இதுவரை நான் கேட்ட கதைகளில் 10 நிமிடங்களில் ஒரு கதை பிடித்துப்போனதில்லை. ஆனால் இந்தக் கதை எனக்கு பிடித்துவிட்டது. சூப்பர் கதை. நல்லா பண்ணு” என வாழ்த்தியிருக்கிறார். இரண்டு விஷயங்களையும் கேள்விப்பட்ட ரசிகர்கள் தலைவருக்கும், தளபதிக்கும் எந்த பிரச்னையும் இல்லை ப்பா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





