சமீபத்தில் விஜய் நடித்த லியோ டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், விஜய் பேசிய அந்த தவறான வசனம், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வார்த்தையை பேசியதற்கான விஜயை, மிக கடுமையாக பலரும் விமர்சித்தனர். ஏனெனில், மக்களின் ஊடகத் தளமான சினிமாவை, குழந்தைகள், பெண்கள் என சகல தரப்பினரும் பார்க்கும் நிலையில், இந்த வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ஓடிடி தளங்களில் வெளியாகி வரும் வெப் சீரிஸ்களில், மிக மோசமான அறுவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகள் மிக அதிகளவில் இடம்பெறுகின்றன. சினிமா, டிவி சீரியல் தாண்டி இப்போது வெப் சீரிஸ் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. கோவித்19 காலத்தில், அறிமுகமான வெப் சீரிஸில் இன்று வளர்ந்து பிரபலமாகி விட்டது. முன்னணி நடிகர், நடிகையர் பலரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியில் நல்ல நல்ல வெப் சீரிஸ் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை பிறமொழிகளில் மாற்றம் செய்யப்படும் போது, அதில் வரும் சில கேரக்டர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள், காதுகளை பொத்திக்கொள்ளும் படியான, அறுவருக்கத்தக்க வகையிலான அந்த வார்த்தைகளை யாரும் கேட்கவே முடியாது. ஆனால், இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்களில் இந்த கெட்ட வார்த்தைகள் இல்லை. மொழிமாற்றம் செய்யும்போது இந்த வார்த்தைகள் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.
சினிமா, டிவி சீரியல்களை காட்டிலும் வெப் சீரிஸ் நல்ல கதையம்சங்களை கொண்டதாக இருக்கிறது. பார்த்து ரசிக்கும்படியான நல்ல நடிகர்கள் தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அனைத்து தரப்பினரும் பார்க்க முடியாத அளவுக்கு குறிப்பாக பெண்கள், குடும்பத்தினருடன் பார்க்க முடியாத அளவுக்கு, வசனங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளது.
வெப் சீரிஸ்களுக்கு கட்டுப்பாடுகள், சென்சார் போன்றவை கிடையாது. அதனால், எதையும் பேசிவிடலாம். எத்தகைய காட்சிகளையும் எடுத்து காட்டலாம் என்ற நிலையே காணப்படுகிறது. அதுவும் டப்பிங்கில் மொழி மாற்றம் செய்யும்போது, தமிழில் இத்தகைய கெட்ட வார்த்தைகளை கொண்ட வசனங்களை, அந்த சீரிஸ்களை திரையிடும் ஓடிடி தளங்களே தீர்மானிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தேவையும் அவசியமும் இல்லாமல் இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை அதுவும் குறிப்பாக, தமிழ் வெப் சீரிஸ்களில் ஊடுருவச் செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் ரா கன்டென்ட் ஆக, இந்த வார்த்தைகளை அந்த ஓடிடி தளங்களே இதில் வலுக்கட்டாயமாக இடம்பெறச் செய்வது, எதற்காக என்பதும் பலத்த கேள்வியாக உள்ளது. இன்னும் வரும் நாட்களில் வெப் சீரிஸ் பார்ப்போர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதற்கும் கட்டாயம் சென்சார் என்ற கடிவாளம் போடுவது மிக மிக அவசியம்.





