தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். கடந்த மாதம் 6ம் தேதி அவரது நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
சிறுவயதில் இருந்தே பைக் ரேஸில் ஆர்வமாக இருந்து வரும் நடிகர் அஜீத்குமார், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே பைக் ரேஸில் கலந்துக்கொண்டவர். அவர் முதல் முறையாக 18 வயதில் பைக் ரேஸில் பங்கேற்று இருக்கிறார். இப்படி பலமுறை பைக் ரேஸில் பங்கேற்ற அவர் ஒருமுறை விபத்தில் சிக்கி, 1.5 ஆண்டுகள் படுக்கையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தமிழ் சினிமாவில் நடிகராக பெரிய வரவேற்பை பெற்று டாப் ஸ்டார் நடிகராக இருந்த போதிலும் இப்போதும் நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு அவரது மனைவி ஷாலினியும் முழு ஆதரவு தருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் துபாயில் கார் ரேஸ் துவங்கியது. இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார். அஜீத் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும், போட்டியாளராகவும் அவர் பங்கேற்று கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தொடர்ந்து போர்ச்சுக்கல்லில் நடந்த கார் ரேஸிலும் அவர் கலந்துக்கொண்டார்.
துபாய் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் நடந்த கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்ற போது நடிகர் அஜீத்குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. கடந்த 2.5 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் கார் பந்தயங்களில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் 3 முறை விபத்துகளில் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது இத்தாலியில் நடந்து வரும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமாரும் அவரது குழுவினரும் பங்கேற்று உள்ளனர். நேற்று இத்தாலியில் நடந்த முக்கேலியோ சர்க்யூட்டில் 12 எச் ரேஸில் அஜீத்குமார் அணி பங்கேற்றது. இதில் ஜிடி992 பிரிவில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணி 3ம் இடம் வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு பரிசு பெற மேடை ஏறிய நடிகர் அஜீத்குமார் தேசியக்கொடியுடன் சென்றது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து கார் ரேஸில் வெற்றிகளை படைத்துவரும் அஜீத்குமாருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் குவிகிறது.





