கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் இந்தியன் 2 படத்தின் வேலைகள் நடைபெற்றுள்ளன. விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா என இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் இப்போது இல்லை. பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து பாரா பாடல் வெளியானது. இதன் டீசர் வரும்போது, அனிருத் இசை நன்றாகவே இல்லை என்று பலரும் கமெண்ட் அடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் பாடலையே செதுக்கி இருந்தார் அனிருத். பா விஜய் எழுதிய பாடல்களின் வரியும் இதற்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து இருப்பதற்கு முக்கிய காரணம் சேனாதிபதி கதாபாத்திரம் தான். முதல் பாகத்தில், தனது வசனங்களாலும், நடிப்பினாலும் சேனாதிபதி தாத்தா கதாபாத்திரம் பலரது மனதிலும் ஆழப் பதிந்தது. லஞ்சம் வாங்கினார் என்பதற்காக தன் மகனையே கொல்லத் துணியும் அந்த கதாபாத்திரத்தை யாரும் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த கதாபாத்திரத்தை சங்கர் கொண்டு வந்திருக்கிறார். படத்தில், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். இதில் சித்தார்த் கதாபாத்திரம், சேனாதிபதி தாத்தாவின் பேரனாக வருவார் என்று கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்தை எடுக்கும் போதே அதன் மூன்றாம் பாகத்தையும் சங்கர் எடுத்து விட்டார். படத்தில் ஏராளமான காட்சிகள் இடம் பெற்று இருந்ததாலேயே, மூன்றாம் பாகத்தை கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியன் 2 திரையிடப்படும் போது, அதன் கிளைமாக்ஸில் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியன் 2 ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் ஒன்றாம் பாகம் அடுத்த மாதம் ஏழாம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.





